ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் டுபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்றது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டுபாயில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டி முடிந்தவுடன் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்குத் திரும்பினர். இந்திய வீரர்கள் பரிசளிப்பு நிகழ்ச்சிக்காக மைதானத்திலேயே காத்திருந்தனர். தாமதத்திற்குக் காரணம் என்ன என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
மைதானத்தில் பாகிஸ்தான் வீரர்கள் தாமதமாக வந்தபோது அவர்களுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன. சுமார் ஒரு மணி நேரம் கழித்து பரிசளிப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன
இந்திய அணிக்கு வழங்கப்பட வேண்டிய கிண்ணத்துக்கு என்னவாயிற்று என்ற கேள்வி எழுந்த நிலையில், பரிசளிப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சைமன் டூல், இந்திய அணி தங்கள் கிண்ணத்தை தற்போது பெறப்போவதில்லை என்று அறிவித்ததோடு, பரிசளிப்பு நிகழ்ச்சி முடிந்ததாக அறிவித்தார்.
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்துவிட்டது தெரியவந்தது.
இதனால், திகைத்துப் போன பாகிஸ்தான் அமைச்சர் மோஷின் நக்வி, இந்திய அணிக்குரிய ஆசிய கிண்ணத்தை கையோடு தனது அறைக்கு தூக்கி சென்றார். அதே நேரத்தில் கிண்ணம் இல்லாமலெயே வெற்றியை இந்திய வீரர்கள் கொண்டாடினர்.
கடந்த ஆண்டு டி-20 உலகக் கிண்ண போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா கிண்ணத்தை கொண்டுவந்தது போல சைகை செய்து சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கமில்லாமல் வெற்றியை கொண்டாடினர்.
இந்திய கிரிக்கெட் வாரியம், நக்வியின் செயலை விளையாட்டுக்கு எதிரான செயல் என்று கடுமையாக விமர்சித்ததுடன், அவர் மீது ஐ.சி.சியில் புகார் அளிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, நக்வி இந்தியாவிடம் ஆசியக் கிண்ணத்தை ஒப்படைக்கத் தயாராக இருப்பததாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்பஸ் இணைய தளம் வெளியிட்டுள்ள அந்த தகவலில் கிண்ணத்தை வழங்க முறையான ஒரு விழா கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறாராம்.
தனது நிபந்தனையை ஆசிய கிண்ண ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. நக்வியின் நிபந்தனைப்படி, அப்படி மீண்டும் ஒரு விழா நடத்தப்பட வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.



