தொல்பொருளியல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் ‘தமிழன்’ பத்திரிகைக்குத் தெரிவித்தன.
இதற்காக 14 உறுப்பினர்களைக் கொண்ட தொல்பொருளியல் சட்ட சீர்திருத்தக் குழுவொன்று புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கலாநிதி காமினி விஜேசூரிய, பேராசிரியர் செனரத் திசாநாயக்க, பேராசிரியர் பீ.வீ. மன்டாவல, பேராசிரியர் வீ. மகேஸ்வரன், பேராசிரியர் சஸ்னி நர்மதா அமரசேகர, பேராசிரியர் பீ.ஏ. ஹுசைன்மியா, கலாநிதி வீ.டி. நந்ததேவா, புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் தேசிய மரபுரிமைக்கான மேலதிக செயலாளர், தொல்பொருளியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம், மத்திய கலாசார நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற கட்டிடக்கலைஞர் ரத்னவேலுப்பிள்ளை மயூரனாதன் மற்றும் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் சட்ட அதிகாரி உள்ளிட்டோர் இந்தக் குழுவின் தற்போதைய உறுப்பினர்களாவர்.
இந்தக் குழுவின் முதலாவது கூட்டம் அண்மையில் பத்தரமுல்லையிலுள்ள புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் தேசிய மரபுரிமைகள் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் பர்சானா ஹனீபா தொல்பொருளியல் சட்ட சீர்திருத்தக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறினார்.
புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவியினால் கடந்த நவம்பர் முதலாம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலூடாக நியமிக்கப்பட்ட தொல்பொருளியல் ஆலோசனை சபையில் சிறுபான்மையினத்தவர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்ற விமர்சனம் கடுமையாக முன்வைக்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டினை நிவர்த்தி செய்யும் வகையிலேயே தொல்பொருளியல் சட்ட சீர்திருத்தக் குழுவில் சிறுபான்மையினத்தவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கடுமையான விமர்சனத்துக்குள்ளான தொல்பொருளியல் ஆலோசனை சபையிலும் சிறுபான்மை சமூகத்தவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, 19 பேரைக் கொண்ட இந்தக் குழு தற்போது 23ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் ஓய்வுபெற்ற பேராசிரியர் பீ.ஏ. ஹுசைன்மியா, ஓய்வுபெற்ற பேராசிரியர் வீ. மகேஸ்வரன் மற்றும் ஓய்வுபெற்ற கட்டிடக்கலைஞர் ரத்னவேலுப்பிள்ளை மயூரனாதன் ஆகியோர் சிறுபான்மை சமூகம் சார்பாக இக்குழுவின் உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்படி இரண்டு குழுக்களிலும் சிறுபான்மை இனத்தவர்களை உள்வாங்குவது என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.



