
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) வீழ்த்தி, சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
இதன் மூலம், ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதவுள்ளன. இந்த பரபரப்பான போட்டி எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற இருக்கிறது.
புதன்கிழமை (17) இரவு துபாயில் இடம்பெற்ற போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஃபகர் ஸமான் 50 ஓட்டங்களை குவித்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு அமீரக அணி, 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. சோப்ரா அதிகபட்சமாக 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்தப் போட்டியில், துடுப்பாட்டத்தில் 29 ஓட்டங்களையம் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய பாகிஸ்தான் வீரர் ஷாகீன் ஷா அஃப்ரிடி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
குழு ஏ பிரிவில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் வெள்ளிக்கிழமை (செப்.19) ஓமனுடன் விளையாட உள்ளது.
ஏற்கனவே, இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் எதிரணி வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்றது விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், மீண்டும் இரு அணிகளும் மோத இருப்பது கிரிக்கெட் இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.



