கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு : பெண் ஒருவர் உட்பட மேலும் மூவர் கைது

கொட்டாஞ்சேனை 16ஆம் ஒழுங்கைப் பகுதியில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர், பெண் ஒருவர் உட்பட, நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, வெல்லம்பிட்டி மற்றும் கிரான்ட்பாஸ் பகுதிகளில் இருந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

துப்பாக்கித் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு தங்குமிட வசதியும் வாகன உதவியும் வழங்கியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது நடவடிக்கையின் போது சந்தேகநபர்களிடமிருந்து ஒரு முச்சக்கரவண்டி மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதானவர்கள் கொழும்பு 13 மற்றும் கிரான்ட்பாஸ் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதே சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் யாழ்ப்பாணத்தில் கடந்த 9ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Similar Posts