மகாவலி ‘கே’ வலயத்தை புதுப்பிக்கத் திட்டம்
மகாவலி ‘கே’ வலயம் புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். இந்த திட்டம் எங்கே உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது? இதற்காக பயன்படுத்தப்படவிருக்கின்ற காணியின் பரப்பு எவ்வளவு, ‘கே’ வலயத்திட்டத்தின் நோக்கம் என்ன?’’ என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பியுமான இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (19) பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) கீழ் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரிடமே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘‘மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தேசிய இன விகிதத்தின் பிரகாரம் நிலப்பகிர்வு மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் குடிப்பரம்பல் மீது ஏற்படும் தாக்கம் தொடர்பாக சில விடயங்களை முன்வைக்க வேண்டியுள்ளது.
பல தசாப்தங்களாக, மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நில ஒதுக்கீடு மற்றும் குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்ட உள்ளூர் சமூகங்களும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுநிருபத்தின் கீழ் அரச காணி ஒதுக்கீடு செய்யும்போது தேசிய இன விகிதாரம் பேணப்படவில்லை. அதனால் பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில் இனவிகிதாசார பரம்பலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சிங்கள பெளத்த பேரினவாத அரசினால் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் நடைபெறுகின்றது என்றும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
அண்மைக்காலங்களில் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் இடம்பெறும் கிவுல் ஓயா திட்டத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் மயிலத்தமடு மற்றும் மாதவணை போன்ற மேய்ச்சல் தரைநிலங்களின் பிரச்சினைகள், குடியேற்றக் கொள்கை மற்றும் நீர்ப்பாசனம் உள்ளிட்ட வளங்களின் சமமான அணுகல் குறித்து பொதுமக்களின் கவலை அதிகரித்துள்ளது. இதனையடுத்து, பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர விடயமாக அமைச்சரிடமிருந்து பின்வரும் விளக்கங்கள் கோரப்படுகின்றன.
13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் அரச நிலங்களைப் பகிர்ந்தளிக்கும்போது தேசிய இன விகிதம் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தேசிய இன விகிதத்தின் அடிப்படையில் மாவட்ட ரீதியாக வழங்கப்பட்ட நிலங்களின் அளவை இன ரீதியான விபரங்களுடன் தெரிவிக்கவும்.
மகாவலி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் வழங்கப்பட்டுள்ள நிலத்தின் மொத்த அளவு (ஏக்கரில்) எவ்வளவு? மேலும் தேசிய இன ரீதியாக பயனடைந்த குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
வடக்கு மாகாணத்தில் கிவுல் ஓயா திட்டத்துக்காக எத்தனை ஏக்கர் காணி மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழிருந்து பெறப்படுகின்றது? வடக்கு பிராந்தியத்திலிருந்து இந்தத் திட்டத்தின் கீழ் எத்தனை குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. மேலும் எத்தனை குடும்பங்களை குடியேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் பயனாளர்கள் தெரிவு செய்யப் பயன்படுத்தப்பட்ட முறைமை என்ன?
மயிலத்தமடு மற்றும் மாதவணை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய மற்றும் மேய்ச்சல் நிலங்கள் போன்ற உள்ளூர் மக்களால் முன்பு பயன்படுத்தப்பட்ட காணியில் எவ்வளவு பகுதி மகாவலி அபிவிருத்தி திட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது?
கிவுல் ஓயா திட்டத்துக்காக 13,000 ஏக்கர் காணி பயன்படுத்தப்படவுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். அவ்வாறாயின், மயிலத்தமடு மற்றும் மாதவணை விவசாய மற்றும் மேய்ச்சல் தரைக்காக மகாவலி ‘எல்’ வலயத்திலிருந்து 3,000 ஹெக்டேயர் காணியினை விடுவிப்பதில் உள்ள பிரச்சினை என்ன?
மகாவலி ‘கே’ வலயம் புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். இந்த திட்டம் எங்கே உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது?. இதற்காக பயன்படுத்தப்படவிருக்கின்ற காணியின் விஸ்தீரணம் எவ்வளவு என்பதுடன் இந்த ‘கே’ வலயத்திட்டத்தின் நோக்கம் என்ன? நில ஒதுக்கீட்டு கொள்கைகள் காரணமாக மக்கள் அமைப்பில் மாற்றம் அல்லது உள்ளூர் தேசிய இனங்களின் இடம்பெயர்வு மற்றும் புறக்கணிப்பு ஏற்படாமல் இருக்க அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?’’ என்ற கேள்விகளை எழுப்பினார்.
