மடகாஸ்கரைச் சூறையாடிய ‘கசானி’ புயல்: 9 பேர் பலி

இந்தியப் பெருங்கடலில் உருவான ‘கசானி’ புயல் மடகாஸ்கர் நாட்டைத் தாக்கியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த காற்று மற்றும் கனமழையினால் அந்நாட்டின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு ஆபிரிக்க நாடான மடகாஸ்கரை நோக்கி நகர்ந்த ‘கசானி’ (Kazani) புயல், நேற்று இரவு அட்சினானா மாகாணத்தில் உள்ள தமசினா நகர் கடற்பகுதியில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய அதிதீவிர மழை பெய்தது.

புயலின் தாக்கத்தால் அட்சினானா மாகாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது:

புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர், 33 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கனமழையால் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சூறாவளிக் காற்றினால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததுடன், மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

புயல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதிப்பு காரணமாக சுமார் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், சிக்கியிருப்பவர்களை மீட்கவும் மடகாஸ்கர் இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான மக்கள் அடிப்படை வசதிகளின்றிப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Similar Posts