அமெரிக்காவின் உத்தியோகபூர்வ மொழியாக ஆங்கிலம் இருக்குமென டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததோடு அதற்குரிய புதிய உத்தரவில் அவர் இன்று (2) கையெழுத்திட்டுள்ளார்.
டிரம்ப் வெளியிட்ட அந்த உத்தரவில்,
“நமது குடியரசு நிறுவப்பட்டது முதல் ஆங்கிலம் நமது தேசிய மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நமது தேசத்தின் சுதந்திர பிரகடனம், அரசியலமைப்பு உள்ளிட்ட முக்கிய வரலாற்று அரசியல் ஆவணங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவையே.
எனவே, ஆங்கிலம் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாகி நீண்ட காலமாகிவிட்டது. தேசிய அளவில் அறிவிக்கப்பட்ட ஒரு மொழி ஒருங்கிணைந்த மற்றும் ஒருமித்த சமுதாயத்தின் மையமாகக் கருதப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் ஒரே மொழி பயன்படுத்தப்படுவது சுதந்திரமான கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் குடிமக்களால் மேலும் வலுவடையும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ”நமது தேசிய மொழியைக் கற்கவும், ஏற்றுக் கொள்ளவும் புதிய அமெரிக்கர்களை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவை தனது கனவாகக் கொண்டுள்ளவர்களுக்கான அதிகாரத்தை இது வழங்கும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆங்கிலம் பெரும்பான்மையான மொழியாக இருந்தாலும், அமெரிக்காவில் 4 கோடிக்கும் அதிகமான மக்கள் வீட்டில் ஸ்பானிஷ் மொழியைப் பேசுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.