முல்லேரியாவா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உதுமுல்லா பகுதியில் கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 2 கிலோ ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கை, நாட்டிலுள்ள குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கை பொலிஸாரின் நடப்பு செயற்திட்டத்தின் கீழ், இடைக்கால பொலிஸ் மா அதிபரின் உத்தரவின்படி நேற்று (28) அதிகாலை மேற்கொள்ளப்பட்டது.
சந்தேகநபரின் வீட்டில் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது, 2 கிலோ 218 கிராம் ஹெரோயின், போதைப்பொருள் வர்த்தகத்தால் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ. 667,000 பணம், மூன்று கைபேசிகள், மற்றும் போதைப்பொருள் கடத்த பயன்படுத்திய கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் 41 வயதுடைய முல்லேரியாவா பகுதியை சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
விசாரணைகளில், வெளிநாட்டில் வசிக்கும் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரரின் பணிப்புரையின் கீழ் சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.