துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான சிங்கள பாடகர் ‘ஷான் புதா’ உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவரும் மாத்தறை நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 7 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியுடன் ‘ஷான் புதா’ என்ற நபர் வெள்ளிக்கிழமை (14) ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
துப்பாக்கியைக் கொடுத்த மன்னார் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு கான்ஸ்டபிள் மற்றும் பாடகரின் முகாமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மாத்தறை கொட்டவில காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது, பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியைத் திருடி, பாடகரிடம் ஒப்படைத்ததாக முதற்கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்தது.
மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, திருடப்பட்ட துப்பாக்கி தொடர்பாக பொலிஸ் கான்ஸ்டபிளிடம் விசாரணை நடத்தப்பட்டது, அப்போது அந்த துப்பாக்கி பாடகர் ஷான் புத்தாவின் வசம் இருந்ததை அவர் வெளிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (14) இரவு 10 மணியளவில் சந்தேகநபர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் கொடகமவைச் சேர்ந்த அமில கௌஷான் குணரத்ன எனப்படும் ஷான் புதா, ஷான் புதாவின் முகாமையாளராகப் பணிபுரியும் ஊருபொக்கவைச் சேர்ந்த கேஷர இஷான் மற்றும் ஹோமாகமவைச் சேர்ந்த 27 வயதான சந்தேக நபர் பொலிஸ் கான்ஸ்டபிள் சந்திக ஶ்ரீமால் ஆவர்.
சந்தேக நபர்கள் வைத்திய பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு மாத்தறை நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 7 நாட்கள் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொட்டவில பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.