கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதியரசர் மொஹமட் லஃபர் தாஹிர் தலைமையில் இன்று பிற்பகல் மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் நிஷாந்த, கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தின் மார்ஷல் மற்றும் கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பிரதிநிதிகள் இந்த விசேட சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து நபர்களும் சட்டத்தரணிகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மேன்முறையீட்டு நீதிமன்ற கட்டடத்தின் நுழைவாயிலில் பொருத்தப்பட்டுள்ள விசேட பரிசோதனை இயந்திரத்தை (ஸ்கேன் இயந்திரம்) ஊடாகச் சென்று அதற்கான ஆதரவை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற பதிவாளர் சஞ்சீவ பெர்னாண்டோ அனைத்து சட்டத்தரணிகளையும் பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறார்.
அதுமட்டுமல்லாமல், மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு தெரியப்படுத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் இந்தக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.