மாகாண தேர்தல் முறைமை குறித்து விசேட விவாதம்
“பாதீடு மீதான விவாதம் நிறைவடைந்ததன் பின்னர் மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் புதிய விவாதமொன்றை நடத்தி மகளிர் பிரதிநிதித்துவத்துடன் எவ்வாறு புதிய தேர்தல் முறைமையை சட்டமாக நிறைவேற்றுவதென்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும்.
அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலேயே இதற்கான பேச்சுவார்த்தைகள் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்படும். அந்த முறைமைக்கு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளினதும் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொண்டு சட்டமாக நிறைவேற்றிக்கொண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம்” என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று முன்தினம் (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
‘‘பாராளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும். மாகாண சபையை எடுத்துக்கொண்டால், மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு சட்டமொன்று இல்லை.
ஏற்கனவே விகிதாசாரத் தேர்தல் முறைமை நடைமுறையிலிருந்தது. அதனை வேண்டாமென நிராகரித்து பாராளுமன்றத்தில் தீர்க்கமாகக் கலந்தாலோசித்து கலப்புத் தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்தினார்கள். அந்தக் கலப்புத் தேர்தல் முறைமையில் பெண்கள் பிரதிநிதித்துவத்துக்காக கோட்டாவொன்றுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், எல்லை நிர்ணய அறிக்கைக்கும் அனுமதி வழங்கப்படாததால் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிய தேர்தல் முறைமை பிரச்சினைக்குரியதென்பதால் அதனைப் புறம்பாக வைத்துவிட்டு பழைய தேர்தல் முறைமையில் தேர்தலை நடத்த வேண்டுமென்ற வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறுகின்றன. பழைய முறைமைக்குச் சென்றால் விகிதாசாரத் தேர்தல் முறைமையிலேயே தேர்தலை நடத்த வேண்டும்.
அதேபோல், விகிதாசாரத் தேர்தல் முறைமையில் பெண்கள் பிரதிநிதித்துவத்துக்கான கோட்டா இல்லை. ஆகவே, விகிதாசாரத் தேர்தல் முறைமையில் எவ்வாறு பெண்களுக்கு கோட்டாவைப் பெற்றுக்கொடுப்பதென்பது தொடர்பிலும் இளைஞர்கள் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுப்பதென்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
எனவே, மகளிர் மற்றும் இளைஞர்கள் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கிய வகையில் புதிய முறைமையை உருவாக்க வேண்டும். இந்த விடயத்தில் கருத்தாடலொன்று இருக்கிறது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதம் நிறைவடைந்ததன் பின்னர் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் புதிய விவாதமொன்றை முன்னெடுத்து மகளிர் பிரதிநித்துவத்துடன் எவ்வாறு புதிய தேர்தல் முறைமையை சட்டமாக நிறைவேற்றுவதென்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும்.
அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலேயே இதற்கான பேச்சுவார்த்தைகளை பாராளுமன்றத்தில் ஆரம்பிப்போம். அந்த முறைமைக்கு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் சட்டமாக நிறைவேற்றிக்கொண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம். அதன்போது மகளிர் பிரதிநிதித்துவத்தையும் கட்டாயம் உள்ளடக்குவோம்’’ என்றார்.
