களுத்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் ஐஸ் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட “பெத்தி ரங்கா” என்ற புனைப்பெயரில் அறியப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெதியவல சுனாமி வீட்டுத் தொகுதியில் நேற்று (24) களுத்துறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் “பெத்தி ரங்கா” என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் ஜம்புவாகே மதுரங்க சில்வா ஆவார்.
களுத்துறை வடக்கின் தெதியவலையில் உள்ள சுனாமி வீட்டுத் தொகுதியில் இந்த போதைப்பொருள் வியாபாரத்தை சந்தேக நபர் மேற்கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சந்தேகநபரின் வீட்டைச் சோதனையிட்டபோது, வீட்டின் பின்னால் இருந்த அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
அவரை கைது செய்து சோதனை செய்தபோது, 10 கிராம் ஐஸ், 18 போதை மாத்திரைகள், டிஜிட்டல் தராசு, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈட்டிய 50 ஆயிரம் ரூபாய் பணம், கைப்பேசி ஆகியன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட பின்னர், அவரது வீட்டை சோதனை செய்தபோது வீட்டின் சமையலறை கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கூர்மையான ஆயுதங்களையும் பொலிசார் கண்டுபிடித்தனர்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், கொழும்பு பகுதியில் இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கையிலிருந்து இந்த போதைப்பொருள் தொகை பெறப்படுவதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபருக்கு எதிராக பதினேழு போதைப்பொருள் வழக்குகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றில் பெரும்பாலானவை ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவை என்றும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.