பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கான புதிய கழிவுத் தொகைக்கு, எரிபொருள் விநியோகஸ்தர்கள் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், எதிர்வரும் இருவாரங்களுக்கு புதிய கழிவுத் தொகையின் அடிப்படையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இடம்பெறுமென்று எரிபொருள் கூட்டுத்தாபன தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்தார்.
இதுதொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கும் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே இணக்கம் ஏற்பட்டுள்ளது. இருவாரத்தின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 18ஆம் திகதி எரிபொருள் விநியோகஸ்தர்களை சந்தித்து இந்த புதிய முறையிலுள்ள பிரச்சினைகளை கலந்தாலோசிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் அதன்போது கவனம் செலுத்தப்படுமென்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘‘பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கழிவுத் தொகை தொடர்பான மதிப்பீடுகளுக்கமைய, ஒரு மாதகாலம் இயங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இக்காலப்பகுதிக்குள் இதுதொடர்பில் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருக்குமாயின் உண்மையான செலவின விபரத்தை அவர்கள் எமக்கு மீளப் பெற்றுக்கொடுப்பார்கள். அந்த செலவினங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் எதிர்வரும் 18ஆம் திகதி இருதரப்பினரும் ஒன்றுகூடி மீண்டும் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
கடந்த காலங்களில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கும் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கும் இடையே பல்வேறு முரண்பாடுகள் காணப்பட்டன. இதனால் இருதரப்பினரிடையேயான நட்புறவு சீர்குலைந்திருந்தது. இதுவே இப்பிரச்சினைக்கு மூலகாரணமாக அமைந்துள்ளது. இருதரப்பு நட்புறவை மேம்படுத்திக்கொண்டு நாட்டு மக்களுக்கு சீரான சேவையை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இதன்பின்னர் பொதுமக்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்படாது’’ என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்வைத்த புதிய கழிவு தொகைக்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் தங்கள் உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (04) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்திய கழிவை செயற்படுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி பணிகள் தொடரும். இதற்கிடையில், எரிபொருள் கொள்வனவாளர்களும் தங்களுக்கு பொருத்தமான பல பிரச்சினைகளை முன்வைத்துள்ளனர்.
அந்தப்பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாட, புதிய கழிவுத் தொகையை செயற்படுத்தப்படும்போது விநியோகஸ்தர்களின் சிக்கல்கள் தொடர்பில் ஆராய 18ஆம் திகதி பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.