பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு இரு நாள் வதிவிட செயலமர்வு

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் வதிவிட செயலமர்வை மார்ச் 06 மற்றும் 07ஆம் திகதிகளில் நடத்துவதற்கு திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் இணைத்தலைவர்களான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் கடந்த 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராஜபுத்திரன் இராசமாணிக்கம்,

ஜனநாயகத்திற்கான வெஸ்மினிஸ்டர் மன்றத்தின் (WFD) அனுசரணை வழங்கும் இந்தச் செயலமர்வு ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்று திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படவிருக்கும் எதிர்காலத் திட்டங்களை வகுப்பதை முதன்மை நோக்காகக் கொண்டது என்றும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களில் குழுக்களை நிறுவும் போது, ​​அந்தக் குழுக்களுக்கு சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை நியமிப்பதற்குத் தற்பொழுது காணப்படும் ஏற்பாடுகளை அமுல்படுத்துவதற்காக ஒன்றியத்தின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள முன்னோடித் திட்டம் தொடர்பில் நிபுணர்களின் கருத்தையும்

பெற்று இதனை வெற்றியாக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Similar Posts