சுகாதாரத் துறை வல்லுநர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
வரவு செலவு திட்ட சுகாதார அமைச்சு சார் குழு நிலை விவாதத்தில் இன்று (06) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு முன்வைத்தார்.
சுகாதாரத் துறையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றே அந்தத் துறையில் உள்ள நிபுணர்களை தக்க வைத்து கொள்வதும் பிரதானமாகும். இதில் பாரதூரமான பிரச்சினைகள் காணப்படுகின்றன. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கருத்துப்படி, அனைத்து வகையான வைத்தியர்களுக்குமான மேலதிக நேர கடமைக்கான கொடுப்பனவு 1/80 இல் இருந்து 1/120 ஆக குறைக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்வதற்கான கொடுப்பனவு 1/20 இல் இருந்து 1/30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வைத்தியர்களின் காத்திருப்பு கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு, வாகன உரிம பத்திர சிக்கல்கள், பயிற்சியாளர்களின் கொடுப்பனவுகள், பட்ட பின் படிப்பு கற்கைகளைத் தொடருவோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் போன்றன இற்றைப்படுத்தப்படாமையால் ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் சில வைத்தியர்கள் வெளிநாடுகளில் மருத்துவ சேவைக்கான தகுதிகளை பூர்த்தி செய்து வெளிநாடு செல்ல தயாராகி வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தாதியர் சேவையில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில் கடுமையான சிக்கல்கள் காணப்படுகின்றன. பொது விடுமுறை மற்றும் வார ஓய்வு நாட்களுக்கான கொடுப்பனவு அடிப்படை சம்பளத்தில் 1/20 இல் இருந்து 1/30 ஆக குறைக்கப்பட்டுள்ளன. ஒரு மணிநேர சேவைக்கான கொடுப்பனவு 1/160 1/200 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இத்துறையில் தாதியர்கள் மகத்தான சேவைகளை ஆற்றி வருகின்றனர். தாதியர்கள் பற்றாக்குறையும் கடுமையாக காணப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தியின் கூட்டங்களுக்கு உத்தியோகபூர்வ ஆடையில் வந்து இவ்வாறு ஆதரவளித்த தாதியர்களை இவ்வாறு தான் நடத்துவதா ? மீண்டும் ஒருமுறை சிந்தித்துப் பார்த்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
இலவச கல்வித் துறை ஊடாக வெளியேறிய பட்டத்தாரிகள் வேலையில்லாமல் இருப்பதால், இவர்களுக்கு வேலை வழங்கி புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள வேண்டும். ஆயுர்வேத பட்டதாரிகள் பிரச்சினை குறித்து கவனம் செலுத்திய அவர், ஏறக்குறைய 1800 ஆயுர்வேத பட்டதாரிகள் வேலையில்லாமல் இருப்பதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் வரையறுக்கப்பட்ட பயிற்சியை முடித்துவிட்டு சுமார் 200 பேர் வெளியேரி வரும் நேரத்தில், ஆயுர்வேத மருத்துவத் துறையில் சுமார் 600 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. எனவே இது குறித்தும் ஆராயுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
2023 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க ஆயுர்வேத சட்டத்தின் மேற்கோள்ளப்பட்ட திருத்தங்களால் ஆயுர்வேத துறை பாதிக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருந்துகளை பயிரிடுதல், தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் விநியோகம் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள உற்ப்பத்தியாளர்கள், தொழில்முனைவோர், தொழிலதிபர்கள், வர்த்தக நிலையங்களை நடத்தி வருபவர்கள் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இதனால் நோயாளர்களும் அசௌகரியங்களுக்கு ஆளாகியுள்ளதால், இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இவர்களினது சேவையினை நிரந்தரமாக்க தலையிடுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்கள் பெரும் சேவையை ஆற்றி வருகின்றனர். மேலதிக நேர கொடுப்பனவு இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. எனவே இந்த மேலதிக கொடுப்பனவை பெற்றுக் கொடுங்கள். குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு பயணச் செலவாக கிலோமீட்டருக்கு 2 ரூபா வழங்கப்படுகின்றது. குறைந்த வசதிகள் காணப்பட்டாலும், வெற்றிடங்கள் காணப்படுகின்றன. 937 பேர் இதில் புதிய நியமனங்களை எதிர்பார்த்துள்ளனர். மேலும் 1200 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுவதால், நோய் தடுப்பு துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இத்தரப்பினரது பிரச்சினைகளை தீர்க்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கோரிக்கை விடுத்தார்.
சுகாதாரமும் கல்வியும் என்பன மனித உரிமைகளாகும். அரசியலமைப்பில் உள்ள மனித உரிமைகள் அத்தியாயத்தில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. பொருளாதாரம், சமூகம், மதம், கலாச்சாரம், சுகாதாரம் போன்ற பிற துறைகளும் மனித உரிமைகளாகும். எனவே, சுகாதாரத் துறையை மனித உரிமையாக மாற்றுமாறு கோரிக்கை விடுக்கின்றேன். இதற்கு எதிர்க்கட்சி தமது முழு ஆதரவை பெற்றுத் தரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.