“யாரோ ஒருவர் செய்த திருட்டுக்கு அதனை ராஜபக்ஷக்கள் மீது சுமத்தினால் ராஜபக்ஷக்கள் சிறைக்குச் செல்வதும் சம்பந்தப்பட்டவர்கள் விடுதலையாவதும் வழக்கமாகிவிட்டது. அரசாங்கமும் இதனை பழக்கமாக எடுத்துச்சென்றால் நாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு குற்றங்களையும் எங்கள்மீது சுமத்திவிட்டு குற்றவாளிகள் தலைமறைவாகிவிடுவார்கள்”- என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று (26) குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்குச் சென்றிருந்த நாமல் ராஜபக்ஷ, ஐந்து மணிநேர விசாரணையின் பின்னர் அங்கிருந்து வெளியேறியிருந்தார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசாரணைக்கு செல்வதற்கு முன்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
விடுமுறை தினமென்றாலும் விசாரணை நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குகிறோம். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, ஏனைய சமய விடுமுறை தினங்களிலும் எங்களைப் பற்றி விசாரணைகளை முன்னெடுப்பது போன்றே மக்களின் நாளாந்த பிரச்சினைகளுக்கும் பொருளாதார நெருக்கடிக்காக வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு இவ்வாறு அயராது உழைத்தால் சிறப்பாக இருக்கும்.
ஏதாவது திருட்டை செய்துவிட்டு அதனை ராஜபக்ஷக்கள் மீது சுமத்தினால் ராஜபக்ஷக்கள் சிறைக்கு செல்வார்கள். சம்பந்தப்பட்டவர்கள் விடுதலையாகிவிடுவார்கள் என்பது இலகுவாகிவிட்டது. அரசாங்கமும் இதனை பழக்கமாக எடுத்துச் சென்றால் நாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு குற்றங்களையும் எங்களின்மீது சுமத்திவிட்டு குற்றவாளிகள் தலைமறைவாகிவிடுவார்கள்.
அதனால் அரசியல் பழிவாங்கலை ஓரம் வைத்துவிட்டு உண்மையான குற்றவாளிகளை தேடி கண்டுபிடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். எயார் பஸ் கொடுக்கல் வாங்கலுக்கும் எனக்கும் உண்மையில் எந்த தொடர்பும் இல்லை.
நான் தவறிழைக்கவில்லை என்பது நீதிமன்ற வழக்கு தீர்ப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும். மாறாக யாராவதொருவர் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அது தீர்மானமாகாது. நீதிமன்றத்தில் என்னில் தவறு இல்லை என்பதை நிரூபிப்போம் என்றார்.