பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை முடக்கிய வழக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு 22 மில்லியன் டொலர் நிவாரணம் வழங்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான செய்தி வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றபோது, தோல்வி அனுபவித்த டொனால்ட் ட்ரம்ப், அதை ஏற்க முடியாமல் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசியார். அந்த பேச்சை, ட்ரம்ப் தனது சமூக ஊடக கணக்குகளில் பகிர்ந்தார். இதனால், அவரது ஆதரவாளர்கள், ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்கும் போது, அமெரிக்க தலைமை செயலக கட்டடத்தில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ட்ரம்பின் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. இத்தகைய முடிவை எதிர்த்து, ட்ரம்ப் வழக்கு தொடர்ந்தார். தற்போது, அவர் மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில், மெட்டா நிறுவனம் இந்த வழக்கை சமரசமாக முடிக்க முடிவெடுத்துள்ளது.
மேலும், 22 மில்லியன் டொலர் (இதை இந்திய ரூபாயில் 190 கோடி ரூபாய்) என்ற தொகையை ட்ரம்புக்கு நிவாரணமாக வழங்குமாறு மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்பாக, மெட்டா நிறுவனத்தின் சி.இ.ஓ. மார்க் ஜூகர்பெர்க் தனது நிறுவனத்தின் வழக்கறிஞரின் மூலம் காலிஃபோர்னியா கோர்ட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “இருதரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டு விட்டதால், இந்த வழக்கை விரைவில் முடித்துக் கொள்கிறோம்” என குறிப்பிட்டிருந்தார். ஆனால், தொகை தொடர்பான எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை முடக்கியதற்கான வழக்கில், ட்ரம்புக்கு இது ஒரு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.