தமிழர் உரிமைகளுக்காக அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு, சிறைவாசத்தையும் அனுபவித்துத் தனது ஐந்து தசாப்த அரசியல் வாழ்க்கையில் தமிழ் மக்களின் சிந்தனைகளுக்கு உரிமையாக குரல் கொடுத்த மாவை சேனாதிராஜாவின் மறைவு, தமிழ் சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகும் என்று கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இரங்கல் செய்தியில் அவர் கூறியுள்ளதாவது:
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மறைவு செய்தி எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவு தமிழரசுக் கட்சிக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும்.
அநீதிக்கு எதிராகவும், நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் தன்னலமின்றி குரல் கொடுத்த மாவை சேனாதிராஜா, ஜே.வி.பியின் நிறுவனர் தோழர் ரோஹண விஜேவீரவின் போராட்டங்களை நேர்கொண்ட பார்வையுடன் அவதானித்தார்.
ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு எதிராக ஜே.வி.பியின் அணுகுமுறையை அவர் ஆதரித்திருந்தார்.இறந்தும் அழியாத தலைவர் என சொல்லப்படும் அளவுக்கு, மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி போராடிய அரசியல்வாதியாக அவர் நினைவுபடுத்தப்படுவார்.
மாவை அண்ணன் இவ்வுலகை விட்டு நீங்கினாலும், அவர் முன்வைத்த இலட்சியங்களை நாம் முழுமையாக கடைப்பிடிக்க முயற்சிக்கவேண்டும்.மாவை சேனாதிராஜாவின் மறைவால் துயருறும் அவரது குடும்பத்தார், ஆதரவாளர்கள் மற்றும் அவரைப் பற்றிய அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆத்மா இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன்.”
மாவை சேனாதிராஜாவின் மறைவு: தமிழ் மக்களுக்கு பேரிழப்பு – அமைச்சர் இரா.சந்திரசேகர்
Date: