சண்டே லீடர்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச்சம்பவத்தில், குற்றவியல் வழக்கு விசாரணை தொடர்பில் சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணையொன்றை கொண்டுவருமாறு கோரி லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்க பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு நேற்று (06) கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
சட்ட மா அதிபர் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் கடமையை பாரதூரமான வகையில் புறக்கணித்தமை ஆகிய காரணங்களின் அடிப்படையில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்குமாறும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினால் லசந்தவின் கொலை வழக்கு விசாரணையின் போது இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மூவரை விடுவிப்பதற்கு சட்ட மா அதிபர் பரிந்துரை வழங்கியுள்ளதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
அதேவேளை, இதுதொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர் சட்ட மா அதிபரின் பரிந்துரை தொடர்பில் பரிசீலித்து வருவதாக பதிலளித்துள்ளார். அதுதொடர்பில் எதிர்வரும் நாட்களில் பதிலளிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.