அமெரிக்காவின் எவ்.பி.ஐ. (FBI) புலனாய்வு அமைப்பின் 9ஆவது இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் பதவியேற்றுக்கொண்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் இப்பதவி வகிப்பது இதுவே முதன்முறையாகும்.
காஷ் படேல் பதவியேற்பு விழாவில் அவருடன் அவரது காதலி மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். காஷ் படேலுக்கு அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி பதவிப்பிரமாணம் செய்துவைத்துள்ளார்.
அப்போது, காஷ் படேல், இந்து மதத்தின் புனித நூலான பகவத் கீதையின் மீது கைகளை வைத்து பதவிப்பிரமாண உறுதிமொழியளித்துள்ளார்.
பதவியேற்பு விழாவில் பகவத் கீதையின் சாட்சியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டவர்களில் காஷ் படேல் இரண்டாவது நபராகிறார்.
ஏற்கனவே சுஹாஷ் சுப்ரமணியம் கீதையின் சாட்சியாக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது. இந்திய வம்சாவளி வழக்கறிஞரான சுஹாஸ் சுப்ரமணியம் வெர்ஜீனியா மற்றும் கிழக்குக் கடற்கரையிலிருந்து மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.
பதவியேற்புக்குப் பின்னர் காஷ் படேல் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “உலகின் மிகப் பெரிய நாடான அமெரிக்காவின் சட்ட அமுலாக்க முகமைக்கு தலைமை தாங்கவிருக்கும் முதல் தலைமுறை இந்தியருடன் நீங்கள் பேசுகிறீர்கள். FBIக்கு உள்ளேயும், அதற்கு வெளியேயும் பொறுப்புடன் செயற்படுவேன்” என்றார்.