கடந்த கால படுகொலைகள் தொடர்பில் இவ் அரசும் ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்க தவறுகின்றனர்

Date:

இந்த நாட்டில் இன்னும் பொறுப்புக்கூறல் குறித்து கடுமையான கேள்விகள் உள்ளன. எனது இந்த உரையின் போது மேதகு ஜனாதிபதி அவர்களும் சபையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொறுப்புக்கூறல்
தொடர்பில் அரசாங்கத்தின் சார்பில் எவ்வித முன்னேற்றகரமான கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.

இது தொடர்பில் உள்நாட்டு செயல்முறையை கடைப்பிடிக்கப் போகின்றீர்களா? அல்லது சர்வதேச செயல்முறையை நாடுகின்றீர்களா? என்பன பாரிய கேள்விக்குறியாக உள்ளன. இதனை உங்களது உரையில் தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அதற்கு மேலதிகமாக, இந்த ட்ரிப்பலி ப்ளடுன் ஊடாக முன்னெடுக்கப்பட்ட கொலைகள் தொடர்பில் கடந்த காலங்களாக நான் தொடர்ச்சியாக பல விசேட அறிவித்தல்களை வழங்கியுள்ளேன். ஆனால் இதுவரை அது தொடர்பில் எவ்வித விசாரணைகளும் ஆரம்பிக்கப்படவில்லை.

இவற்றுடன் அரச புலனாய்வுத்துறையினர் தொடர்புபட்டு செயற்பட்டு இருந்ததாக நாம் மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். அண்மையில் இடம்பெற்ற கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலையை அடுத்து சாட்சியாளர்கள் எமக்கு பாரிய அழுத்தம் ஏற்படுத்தி வருகின்றனர். சாட்சியங்களை உங்களுக்கு வழங்கி நீங்கள் பாராளுமன்றத்திலும் இதனை வெளிப்படுத்திய நிலையில் நமக்கும் இந்த நிலைதான் நேருமா என்று கேள்வி எழுப்புகின்றனர்.

நான் வேண்டுமாயின் மற்றுமாரு விடயத்தை குறிப்பிடுகின்றேன். 2009 யுத்தத்தின் பின்னர் மெனிக்ஃபாமில் இருந்த 27 இளைஞர்கள் காத்தான்குடிக்கு அழைத்து வரப்பட்டு, காத்தான்குடியில் வைத்து கொலை செய்யப்பட்டு கடலில் போடப்பட்டதாக அதனுடன் தொடர்புடைய புலனாய்வுத்துறையின் அப்போதிருந்த வான் சாரதி ஒருவர் வழங்கி சாட்சியம் தற்போதும் எனது தொலைபேசியில் உள்ளது.

இவை தொடர்பில் விசாரணை செய்யப்படாவிடின், இந்த அரசாங்கத்தினர் கடந்த காலத்தில் இருந்த சதிகாரர்களுக்கு பயந்து போயுள்ளனரா? இந்த அரசாங்கம் இவற்றை மூடி மறைக்க முயல்கின்றதா? என்பது தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக ஒருபுறம் கூறப்படுகிறது. அந்த விசாரணைகள் சரியாக முன்னெமுடுக்கப்படுமாயின் அது எமக்கு மகிழ்ச்சி. ஆனால் இது தொடர்பில் ஒரு நபரிடமேனும் வாக்குமூலம் பதிவுசெய்யப்படவில்லை என்பதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்தவகையில் பொறுப்புகூறல் விடயத்தில் பாரிய பிரச்சினை காணப்படுகிறது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை கொண்டு வரப்போகின்றீர்களா? இன்றேல் நாட்டில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் ஏதேனும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றீர்களா? இல்லை என்றால் கொலைகள் தொடர்பில் ஏதேனும் விசாரணைகளை முன்னெடுக்கின்றீர்களா? எதுவும் இல்லை.

வடக்கு மக்கள் ஜனாதிபதிக்கு விசேட ஆணை ஒன்றை வழங்கினர். மட்டக்களப்பு மக்கள் என்றால் எனக்கு தான் ஆணை வழங்கினர். இவை பற்றி தேடிப் பார்ப்பதற்காகவே வடக்கு மக்கள் அந்த ஆணையை வழங்கினர்.

அதேபோன்றுதான் இம்முறை பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவு திட்ட தொகையை பார்த்தால் பாரிய சிக்கல் நிலவுகிறது. இந்த வருடத்தில் 135 பில்லியன் தொகை உணவு மற்றும் சீருடைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு 70 பில்லியன், 2024ஆம் ஆண்டு 101 பில்லியன்.

2025 இல் 135 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 33 வீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த காலத்தில் நீங்களும் எதிர்க்கட்சியில் இருந்த காலப்பகுதியில் இந்த சவேந்திர சில்வா பிரான்சிலிருந்து சீருடை தைக்க கொண்டு வந்தார் என தெரிவித்தோம். அவ்வாறாயின் உண்மையான நிலை என்ன என்பதை தற்போது எங்களுக்கு தெரிவியுங்கள். இல்லை என்றால் பாதுகாப்பு துறை தொடர்பில் நாட்டு மக்களுக்கு சொல்லும் கதைகள் உண்மையா, பொய்யா என்பதை தெளிவுபடுத்துங்கள்.

அதேபோன்று தான் இலங்கை போன்றதொரு சிறிய நாட்டுக்குள் பாதுகாப்பு துறையில் உள்ள செலவுகளை குறைக்காமல் எமது பொருளாதாரத்தை சரிசெய்ய முடியாது. இதனை நாங்கள் கடந்த காலங்களிலும் தொடர்ந்து தெரிவித்து வந்தோம். கடந்த கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில் நாங்கள் கண்டோம் இராணுவத்தினரை கொண்டு கட்டிடங்களை கட்டுகின்றனர்.

பிற வேலைகளை செய்கின்றனர். இந்த அரசாங்கத்திலும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 1000 பாடசாலைகளை அமைப்பதற்கு கதிரை மேசைகளை அமைப்பதற்கு இராணுவத்தினரை பயன்படுத்துகின்றனர். அப்படி என்றால் கதிரை மேசை அமைப்பதற்கு இராணுவத்தினரை பயன்படுத்துவதா?

இராணுவத்தை முறையானதாக மாற்றியமைப்போம் என உங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் இன்றும் இவர்களை கதிரை மேசை அமைப்பதற்கு பயன்படுத்துகின்றீர்கள்.

அதேபோன்று தான் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள், கடற்படை முகாம்கள், விமானப்படை முகாம்கள், மக்களின் பாடசாலைகள், பொது சந்தைகள் போன்றன இன்னும் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் பொறுப்பில் காணப்படுகின்றன.

இவற்றை விடுவிப்பதாக குறிப்பிட்டிருந்த போதிலும், நீங்கள் விடுவிப்பதாக கூறிய 7 ஏக்கர் நிலப்பரப்பும் இன்னும் விடுவிக்கப்படவில்லை என உறுப்பினர் கஜன் பொன்னம்பலம் குறிப்பிட்டார். எனவே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை பயன்படுத்தி நீங்கள் எமக்கு நியாயமான ஒரு தீர்வை பெற்றுத் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

அதேபோன்று தான் தேர்தல் கொள்கை பிரகடனத்தின் 172ஆவது பக்கத்தில் உடனடியாக புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு நிறைவேற்று முறையை இல்லாதொழிப்பதாக, அது மட்டுமின்றி புதிய அரசியலமைப்பை உடனடியாக கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பில் எதுவும் காணக்கூடியதாக இல்லை.

அரசாங்கத்தினதும், உங்களதும் பிரபல்யம் காணப்படும் போதே இவற்றை செய்ய வேண்டும். இவற்றை காலம் தாமதித்து காலம் தாமதித்து செய்ய கூடியவை அல்ல. புதிய அரசியலமைப்பு குறித்து எமக்கு அறியக் கிடைத்த ஒரே விடயம் சபாநாயகர் கூறியது, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் பெயரை நிரந்தர எதிர்க்கட்சி தலைவர் என குறிப்பிடுவது மாத்திரமே. வேறு எதுவும் எமக்கு தெரியாது. எனது மேதகு ஜனாதிபதி அவர்களே இது தொடர்பில் உங்களிடமிருந்து பொறுப்புமிக்க பதிலொன்றை எதிர்பார்க்கின்றோம்.

இதற்கு மேலதிகமாக கடந்த காலங்களில் புலனாய்வு துறையின் கேர்னல் மட்டத்தின் மேலுள்ள அனைவரையும் நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது புலனாய்வுத்துறையின் உயர்மட்ட அதிகாரிகளை செயற்படுத்துவது தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு உதவிய புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் என தகவல் பரவிவருகிறது.

எனவே இது தொடர்பிலும் தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் இது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவே பதில் கூற முடியாது என்றாலும் பரவாயில்லை. ஏனென்றால் இது போன்ற பதில்களை கேட்டு கேட்டு நாம் பழகிவிட்டோம்.

எனக்கு சில வேளைகளில் ஜனாதிபதி அவர்கள் குறித்து கவலையும் ஏற்படுகிறது. ஜனாதிபதி அவர்கள் நாடு முழுவதும் சென்று பாடுபட்டு பாரிய முயற்சி எடுத்து இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்தார். ஆனால் இந்த பாராளுமன்றத்திலுள்ள அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாட்டை பார்க்கும் போது ஜனாதிபதி குறித்தும் கவலை ஏற்படுகிறது.

தேர்தல் காலத்தில் குறிப்பிட்ட விடயங்களையும், தற்போது நிகழும் விடயங்களையும் பார்க்கும் போது, உகண்டாவிலிருந்து ஒழித்துவைக்கப்பட்ட பணத்தை கொண்டுவருவதாக கூறப்பட்டது. வீ.எஃப்.எஸ். கொடுக்கல்வாங்கல் என ஏதேனும் செயற்பாட்டை இதுவரை முன்னெடுத்துள்ளீர்களா? சீனி வரி ஊழல் தொடர்பில் நீங்கள் தான் கேள்வி எழுப்பியிருந்தீர்கள். அது தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளீர்களா? தேங்காய் எண்ணெய் ஊழல் குறித்து ஏதேனும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா? அவன்கார்ட் தொடர்பில் ஏதேனும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளீர்களா? அவன்கார்ட் தொடர்பிலும் நிறைய விடயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அது தொடர்பில் பின்னர் குறிப்பிடுகின்றோம்.

இந்த திருடர்களை பிடிப்பதற்காகவே ஆணை வழங்கப்பட்டது. ஆனால் திருடர்களை பிடிக்கின்றார்களா இல்லையா என்பது தொடர்பிலேயே எமக்கு பாரிய பிரச்சினை காணப்படுகிறது. ஏனென்றால் அரச வழக்கறிஞர்கள் அலுவலகம் அமைப்பதாக நாட்டின் நீதி அமைச்சர் கூறுகின்றார். ஆனால் வெளிவிவகார அமைச்சர் ஜெனீவாவிற்கு சென்று அது தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசுகின்றார் இல்லை.

அதற்கு அடுத்ததாக பயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்று மாத்திரமல்ல பயங்கரவாத தடை சட்டத்திற்கு மாற்றாக எதுவும் கொண்டு வர நாம் இடமளிக்க மாட்டோம் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது பயங்கரவாத தடை சட்டத்திற்கு புதிய சட்டமூலத்தை கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் குறிப்பிடுகின்றார். எனவே தேர்தல் மேடைகளில் குறிப்பிடப்பட்டவையும் தற்போது நிகழ்பவையும் ஒன்றுக்கு ஒன்று முரணாகவே காணப்படுகின்றன.

இது தொடர்பில் நான் தொடர்ந்து குறிப்பிட்டு வந்துள்ளேன். கடந்த காலங்களில் 966 பில்லியன் வரி நிவாரணம் வழங்கப்பட்டது. அதனை இந்த அரசாங்கம் ஏன் மீளப் பெறவில்லை.

2025ஆம் ஆண்டிலும் அந்த 966 பில்லியன் வரி நிவாரணம் வழங்கப்படுகிறது. கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு இந்த அரசாங்கத்திலும் 966 வரி நிவாரணம் வழங்கப்படுகிறது. சாதாரண மக்களுக்கு மேலும் வரி விதிக்கப்படுகிறது. அதனால், கௌரவ ஜனாதிபதி அவர்களே உங்கள் மீது மக்கள் இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல் தொகுப்பு பிரதமரிடம் கையளிப்பு

புதிதாகச் சிந்திப்போம், புதுமை காண்போம்' என்ற கருப்பொருளின் கீழ் ருஹூணு பல்கலைக்கழகத்தின்...

மஹிந்தவின் மனு தள்ளுபடி

முறையான மதிப்பீடின்றி தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆக...

கட்டுப்பணம் செலுத்திய ஜேர்மனி பெண்

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மனி நாட்டவர் ஒருவர் வைப்புத்தொகை...

பட்டலந்த அறிக்கை: கே.டி. லால் காந்தவை விசாரிக்க கோரிக்கை

பட்டலந்த அறிக்கை தொடர்பான விவகாரங்களில் அமைச்சர் கே.டி. லால் காந்தவை விசாரிக்க...