இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றதனால் வடக்கு சுமத்ரா பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இந்த வெள்ளத்தில் சுமத்ராவின் சிபோல்கா நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிபோல்கா மற்றும் தெற்கு தபானுலி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாக, இந்தோனேசியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்துடன், 6 பேர் மாயமானதாகக் கூறப்படும் நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் மீட்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.



