இந்தியாவின் உத்தரகண்ட்டில் ஏற்பட்டுள்ள பனிச்சரிவில் 57 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதோடு அவர்களில் இதுவரை 16 பேர் மாத்திரமே மீட்கப்பட்டுள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திலுள்ள மனா என்கிற உயரமான எல்லைக் கிராமத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் எல்லைப்புற வீதியமைப்பு பணிகளில் ஈடுபடுகின்ற 57 தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களில் 16 பேர் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 41 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
தொழிலாளர்கள் மீட்கப்படுவது குறித்து அம்மாநில முதலமைச்சர் குறிப்பிடுகையில் ,
“இதுவரை 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்தோ-திபெத் எல்லைப்பாதுகாப்பு பணியிலுள்ள இராணுவம் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் மீட்புப் பணி நடைபெற்று வருகின்றது. சிக்கியுள்ள நபர்களை விரைவில் பாதுகாப்பாக மீட்க முயற்சித்து வருகிறோம்” என்றார்.
மோசமான வானிலை குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.
இதேவேளை சண்டிகரில் உள்ள பாதுகாப்புத் துறையின் புவித் தகவல் ஆராய்ச்சி நிறுவனம் நேற்று ( 27) விடுத்த எச்சரிக்கையில் சாமோலி, உத்தர்காசி, ருத்ரபிரயாக், பித்தோராகர், பாகேஷ்வர் ஆகிய மாவட்டங்களில் 2,400 மீட்டருக்கு மேல் உயரமான இடங்களில் 24 மணி நேரத்திற்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது