முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நிழல் (மாற்று) பாராளுமன்றத்தை நிறுவுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்காணித்து அதற்கேற்ப மாற்று நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கில் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் அமையவுள்ளது.
ஏற்கனவே பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தற்போது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இந்த மாற்று பாராளுமன்றத்தில் சேர்க்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ள்ளது.
சுமார் 450 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இதற்காக தகுதிபெற்றுள்ளதோடு, அவர்களில் 225 பேர் மட்டுமே மாற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்படுவார்கள்.
இதற்கமைய, குறித்த மாற்று பாராளுமன்றம் மாதத்தின் 08 நாட்கள் கூடும். அரசாங்கத்தில் உள்ள அமைச்சுகளின் எண்ணிக்கைக்கு சமமான அமைச்சர்களைக் கொண்ட நிழல் அமைச்சரவையும் மாற்று பாராளுமன்றத்தில் மூத்த உறுப்பினர்களுடன் நியமிக்கப்படுவர். அவர்கள் தங்களுக்கு
ஒதுக்கப்படும் அமைச்சுக்களின் செயற்பாடுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்று பாராளுமன்றத்தின் சபாநாயகர்இ அவைத் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக சில மூத்த எம்.பிக்களை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது பாராளுமன்றத்தில் செயற்பட்டு வரும் பொது நிறுவனங்கள் குழு (COPE) மற்றும் கணக்குகள் குழு (COPA) உள்ளிட்ட பல குழுக்களும் இந்த நிழல் பாராளுமன்றத்தில் நிறுவப்படுவதாக அறியப்படுகிறது.
இந்த மாற்று பாராளுமன்றத்துக்கு முன்னாள் ஜனாதிபதிகளும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவார்கள் . உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மூத்த அரச தலைவர்களும் இலங்கையின் மாற்று பாராளுமன்றத்தில் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறியப்படுகிறது.