பிரெஞ்சு பிரதம மந்திரி மைக்கேல் பார்னியர், பாராளுமன்றத்தில் வரலாற்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிற்குப் பிறகு, மூன்று மாதங்களில் ராஜினாமா செய்தார். 1962 இல் இருந்து இதுவே முதன்முறையாக ஒரு பிரெஞ்சு அரசாங்கம் இவ்வாறு வீழ்ச்சியடைகிறது. மொத்தம் 577 சட்டமன்ற உறுப்பினர்களில் 331 பேர் பார்னியரின் சிறுபான்மை அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தனர். அவர் சட்டமன்ற ஒப்புதல் இல்லாமல் பட்ஜெட்டை நிறைவேற்ற அரசியலமைப்பு சட்டத்தை சர்ச்சைக்குரிய முறையில் பயன்படுத்தியதுதான் இதற்கு காரணமாகும்.
பார்னியரின் குறுகிய பதவிக்காலம் ஜூன் மாதத்தில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் திடீர் தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்து உருவான அரசியல் நெருக்கடியின் மத்தியில் முடிவடைகிறது. அந்த தேர்தல்களால் இடதுசாரிகள், வலதுசாரிகள் மற்றும் மத்தியவாதிகள் மத்தியில் பிளவுபட்ட பாராளுமன்றம் உருவாகியது, தெளிவான பெரும்பான்மை இல்லாமல்.
இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் இடதுசாரி மற்றும் வலதுசாரி சட்டமன்ற உறுப்பினர்களால் முன்னோடியாக முன்னெடுக்கப்பட்டது. தேசிய பேரணியின் தலைவி மரைன் லு பென் பார்னியரை வளைந்து கொடுக்காதவர் என குற்றம் சாட்டி, அரசியல் குழப்பத்திற்கு மக்ரோனே காரணம் என்றும் அறிவித்தார்.
இப்போது, மக்ரோன் ஒரு புதிய பிரதம மந்திரியை நியமிக்க வேண்டிய பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறார், மேலும் பொருளாதார ஸ்திரமின்மையைத் தவிர்க்க டிசம்பர் 21 இற்கு முன்னதாக பட்ஜெட்டை நிறைவேற்ற வேண்டிய அவசரம் ஏற்பட்டுள்ளது. தற்போது, பிரான்சின் பொதுக் கடன் 111% வரை உயர்ந்துள்ளது, இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இல்லாத அளவுக்கு அதிகமாகும்.
மக்ரோனின் அரசியல் செல்வாக்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் குறைந்து, அவரது இரண்டாவது மற்றும் இறுதி பதவிக்காலத்தின் நடுப்பகுதியில் அவர் கடும் சவால்களை எதிர்கொள்கிறார். மக்ரோனின் ராஜினாமா கோரிக்கைகள் வலுத்து வருவதால், எதிர்கட்சிகள் எதிர்கால அரசியல் பேச்சுவார்த்தைகளில் மேலும் பலம் சேர்க்க முயல்கின்றன. மக்ரோன் வியாழன் மாலை நாட்டுக்கு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
