பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அடுத்த வாரம் எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்துமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன், சட்டமறுப்பு இயக்கத்தை ஆரம்பிக்கப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். அவருடைய கட்சி, பாரிய போராட்டம் ஒன்றை நடத்திய சில நாட்களுக்குப் பின்னர் இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
தமது எக்ஸ் தளத்தில் இடுகை ஒன்றை பதிவிட்டுள்ள இம்ரான் கான், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெசாவரில், 2024 டிசம்பர் 13ம் திகதி அன்று ஒன்று கூடுமாறு ஆதரவாளர்களைக் கேட்டுள்ளார்.
2024 நவம்பர் 25ம் திகதி எதிர்ப்பு ஊர்வலத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு நீதி விசாரணை வேண்டும் என்று அவர் தமது பதிவில் கோரியுள்ளார்.
அத்துடன், பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள தமது அரசியல் ஆதரவாளர்களும் விடுவிக்கப்பட வேண்டும்.
இவ் இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படா விட்டால், டிசம்பர் 14ஆம் திகதி முதல் கீழ்ப்படியாமை இயக்கம் ஆரம்பிக்கப்படும். இந்நிலையில், இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென்றும் கான் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, நவம்பர் 25ம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது, தமது ஆதரவாளர்களில் குறைந்தது 12 ஆதரவாளர்கள் கொல்லப்பட்டதாகவும், கடந்த ஆண்டு மே 9ம் திகதி அன்று வன்முறையில் எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
எனினும், நவம்பர் 25 எதிர்ப்பின் போது, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அரசாங்கம் மறுக்கிறது, மேலும் கானின் ஆதரவாளர்கள் கடந்த ஆண்டு மே 9ஆம் திகதி அன்று இராணுவ தளங்களைத் தாக்கியதாகவும் அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து சிறைப்படுத்தப்பட்டுள்ள 72 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானுக்கு எதிராகப் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.