அரச நிதியை மோசடி செய்து, நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களின் வீடுகளுக்கு
நீதிமன்ற அழைப்பாணைகள் வரும். நாம் சட்டத்தின் பிரகாரமே செயற்படுவோம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (21) இடம் பெற்ற கிளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை முதல் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
”கிளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும். கடந்த கால அரசாங்கங்கள் முன்னெடுத்த திட்டங்கள் ஓரிரு வாரங்களில் முடிவடைந்ததை போன்று கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் ஓரிரு வாரங்களில் மறக்கப்படும் என்ற
சிந்தனையில் ஒருசிலர் இருக்கின்றனர்.
அவ்வாறு நடக்காதுதூய்மை என்ற திட்டத்துக்குள் சுற்றுச்சூழல் தூய்மை பிரதான பங்கு வகிக்கிறது. மனிதர்களின் எண்ணங்கள் மற்றும் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்துவது கிளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தின் பிரதான நோக்கம்.வீதி சட்டங்களை பின்பற்ற வேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த மக்களுக்கும் உண்டு.
வீதியில் பொலிஸார் இல்லாவிடின் வீதி சட்டங்களை பலர் வேண்டுமென்றே மீறுகிறார்கள். ஆகவே சட்டத்தால் மாத்திரம் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. சிந்தனைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
அரச நிதியை மோசடி செய்து, நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி ஒட்டுமொத்த மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்கியவர்கள் இன்று அரசாங்கம் என்ன செய்கிறது, ஊழலுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கேள்வியெழுப்புகின்றனர் கலக்கமடைய வேண்டாம். உங்கள் வீடுகளுக்கு நீதிமன்றத்தின் அழைப்பாணைகள் வரும். அனைத்தும் தூய்மைப்படுத்தப்படும்.
கடந்த காலங்களைப் போன்று அமைச்சுக்களை விஸ்தரிக்கவில்லை. உறவினர்களுக்கு உயர் பதவிகளை வழங்கவில்லை. , அரச செயற்திட்டங்களில் எமது பெயர் பலகைகளை பொறிக்கவில்லை. பொறுப்புடன் செயற்படுகிறோம். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம்.
சட்டத்தின் முன் அனைவரும் தற்போது சமமாக மதிக்கப்படுகிறார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது என்ற காரணத்தால், தன்னிச்சையாக செயற்படுவதில்லை. சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இவ்வளவு காலம் அரச ஆதரவுடன் வைத்தியசாலையில் இருந்த துமிந்த சில்வா தற்போது சிறையில் உள்ளார். அலோசியஸிடமிருந்து மதுவரி அறவிடப்பட்டுள்ளது. அத்துடன் பலருக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனால் தான் ஊழல்வாதிகள் இன்று கலக்கமடைந்து அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுகிறார்கள்” என்றார்.