சௌபாக்கியமான நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் சரியான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு அடிமட்டத்தில் இருந்து வரும் மக்களின்
கருத்துக்கள், ஆலோசனைகள், சிந்தனைகள், அபிப்பிராயங்கள் போன்றவற்றைத் திரட்டி அதன் ஊடாக கொள்கை வகுப்பாக்க முறையை அணுகுவது அவசியமாகும்.
கொள்கை வகுத்தல், அமுல்படுத்தல் மற்றும் அதனை பின்தொடர்தல் போன்ற பல அம்சங்களின் மூலம் சிறந்த நாட்டை உருவாக்கும் பயணித்தில் செயல்திறனுடன்
முன்நகர முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் எமது பங்கேற்பு எவ்வாறு அமைய வேண்டுமென்பது குறித்து ஐ.ம.சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்
மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு தெளிவூட்டும் விதமாக புதன்கிழமை(15) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு
உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்: பங்களிப்பு, அர்ப்பணிப்பு, பொறுப்பான தரவு விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் மக்களின் ஏற்றுக்கொள்ளல் மற்றும்
நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த ஏதுவாக அமையும். தவறான தகவல்களின் அடிப்படையிலமைந்த அரசியல்மயப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு நாம் செல்லக் கூடாது.
ஒவ்வொரு மாதமும் 4 நாட்கள் பாராளுமன்றத்தில் கூடுவோம். இந்த 4 நாட்களில் விவாதிக்கப்படும் விடயங்களில் கூடிய ஈடுபாட்டுடனான பங்களிப்பை
நல்குவோம். கொள்கைச் செயற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, பங்கேற்பு கொள்கை உருவாக்கத்தின் முன்னோடிகளாக மாற நாம் எமது பங்களிப்பை பெற்றுக்
கொடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.