சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கை அரசாங்கம் ‘ஒரே சீனா கொள்கை’யை ஆதரிப்பதாக சீன ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு சீனாவில் உள்ள மக்கள் மண்டபத்தில் உள்நாட்டு நேரப்படி மாலை 5:00 மணிக்கு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சினைகள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்ததாவது,
சீனாவின் பொருளாதாரம், தொழில்துறை மற்றும் தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மனித மேம்பாட்டில் அடைந்துள்ள மகத்தான முன்னேற்றத்தில் இலங்கை மிகவும் மகிழ்ச்சியடைகிறது.
எமது அரசாங்கம் இருதரப்பு மற்றும் பலதரப்பு உட்பட அனைத்து துறைகளிலும் ஒரே சீனா கொள்கையை ஆதரிக்கிறது.
பல தசாப்தங்களாக இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சீனா முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த விஜயம் நமது நாட்டு மக்களின் பரஸ்பர செழிப்பை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.