இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடர் இன்று டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் குழு வெற்றி பெற்றது.
ஆர்சனல் குழு சார்பாகப் பெறப்பட்ட கோலை லியான்ட்ரோ ட்ரொஸார்ட் பெற்றதோடு மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை சண் ஹெயுங்க்-மின் பெற்றார்.
இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற அஸ்தன் வில்லாவுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் தோற்றது. வில்லா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஒலி வட்கின்ஸ் பெற்றிருந்தார்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற கிறிஸ்டல் பலஸுடனான போட்டியில் 0 2 என்ற கோல் கணக்கில் லிஸ்டர் சிற்றி தோல்வியடைந்துள்ளது.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 47 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் உள்ளதோடு 43 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்சனலும், 41 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நொட்டிங்ஹாம் பொரெஸ்டும், 38 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் நியூகாசில் யுனைட்டெட்டும் காணப்படுகின்றன. இதில் லிவர்பூல் ஏனைய அணிகளை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.